Stay Connected...Subscribe Now

ஆண்ட்ராய்ட் 4.0 உடன் புதிய ஆகாஷ் டேப்லெட்- 2… விலை ரூ 2800தான்!


புதிய மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் டேப்லெட் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் குறைந்த விலையில் மாணவர்களுக்கு கிடைக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபில் தெரிவித்திருக்கிறார்.

மாணவர்கள் பயன்பெறக்கூடிய அளவில் மிகக்குறைந்த விலையில் மத்திய அரசு டேட்டாவைண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் ஆண்ட்ராய்ட் டேப்லெட்டுகளை ஆகாஷ் என்ற பெயரில் தயாரித்து வழங்க ஆரம்பித்தது.

7 இன்ச் ரெசிஸ்டீவ் டச் ஸ்கிரீன், 366 மெகா ஹெட்ஸ் ப்ராசஸர், 256 எம்பி ரேம் என்ற மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட இந்த டேப்லெட்டுகள் மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை. காரணம் இதன் செயல்பாடு மிகமோசமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்ததால் டேட்டாவைண்ட் நிறுவனத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் டேப்லேட்டுகளை தயாரித்து பயனாளிகளுக்கு வழங்க முடியவில்லை.

இதை “ஆகாஷ் டேப்லெட் அதன் பெயரைப் போலவே ஆகாயத்திலேயே உள்ளது, பூமிக்கு வரவில்லை, எப்போது வருமென்றும் தெரியவில்லை” என்று குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திரமோடி தொலைதொடர்புத் துறையை கிண்டல் செய்த கூத்தெல்லாம் நடந்தது.

இப்போது புதிய மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் 2 டேப்லட் வரும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வாக்கில் மாணவர்களுக்கு கிடைக்கும் என்று தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபில் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய டேப்லெட்டில் 1ஜிஹெச் ப்ராசஸர், 7இன்ச் கேப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன், 4 மணி நேரம் தாக்குப் பிடிக்கக் கூடிய திறன் வாய்ந்த பேட்டரி ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் 4.0 வெர்ஷன் ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தயாரிப்பு விலை 1500/- ரூபாயாக இருந்தாலும் மாணவர்களுக்கு 2800/- ரூபாயில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடக்கப்போவது என்ன என்பது ஆகாஷ் பூமிக்கு வரும்போது தான் தெரியும்.

Speak Your Mind

*