Stay Connected...Subscribe Now

ஒலியை விட வேகமான பிரமோஸ் ஏவுகணை.. இன்றைய சோதனை அபார வெற்றி!


கோவா: ஒலியை விட அதிவேகமாக சென்று தாக்கி இலக்கை அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரமோஸ் எனும் அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. 8.4 மீட்டர் நீளம், 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை ஒலியைவிட வேகமாக செல்லும் ஆற்றல் கொண்டது.

கடந்த 2006-ம் ஆண்டு பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் முப்படையிலும் பிரமோஸ் ஏவுகனைகள் பரிசோதித்து பார்க்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் இன்று காலை கோவா கடல் பகுதியில் கடற்படை கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டு சோதனை நடந்தது. வழிகாட்டி உதவியுடன் அரபிக்கடலில் ஒரு கப்பலை தாக்கி அழிக்கும் வகையில் இன்றைய பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டதும் அது ஒலியையும் மிஞ்சும் வேகத்தில் சென்று குறிப்பிட்ட கப்பலை தாக்கியது. பிரமோஸ் ஏவுகணை தாக்கியதில் அந்த கப்பல் நொறுங்கி தீ பிடித்தது. நீண்ட நேரம் கப்பலில் தீ பிடித்து எரிந்தபடி இருந்தது.

இதையடுத்து இன்று நடந்த பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணைகள் 300 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. 290 கிலோ மீட்டர் தூரம் வரை பிரமோஸ் பாயும்.

பிரமோஸ் ஏவுகணைகளை அருணாசலபிரதேச மாநில எல்லையில் நிறுத்தி வைக்க இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக பிரமோஸ் ஏவுகணைகளை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் விண்ணில் இருந்தும் இயக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் பிருத்வி 2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது நினைவிருக்கலாம்.

Speak Your Mind

*